Timber by EMSIEN-3 LTD
Tags Posts tagged with "ஆர்.கே.நகர்"

ஆர்.கே.நகர்

0 114
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து. அதிர்ச்சியில் சசிகலா அணி.120 கோடி ரூபாய் அம்போ.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து… அதிர்ச்சியில் சசிகலா அணி…120 கோடி ரூபாய் அம்போ…
சென்னை ஆர்.கே.நகரில் நாளை மறுநாள் நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள சசிகலா தரப்பினர் தாங்கள் செலவு செய்த 120 கோடி ரூபாய் வீணாகிவிட்டதாக புலம்பித் தவித்து வருகின்றனர்.
ஆர்.கே.வாக்குக்கு பணம் கொடுப்பதாக பரவலாகப் புகார்கள் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.
ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்திருக்கும் சூழ்நிலையில் இந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
சசிகலா அணி சார்பில் டி.டி.வி. தினகரன், ஒபிஎஸ் சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் பின்னணிப் பாடகர் கங்கை அமரன், தேமுதிக சார்பில் மதிவாணன், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் லோகநாதன் ஆகியோர் உள்பட 62 பேர் போட்டியிட்டனர்
.இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றன.
இதையடுத்து அங்கு பறக்கும் படையினர் அதிரடிச் சோதனை நடத்தி பணப் பட்டுவாடாவை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆர்.கே.நகர் தேர்தலை நடத்துவதற்கான சிறப்பு அதிகாரியாக விக்ரம் பாத்ரா என்கிற புதிய அதிகாரியும் நியமிக்கப்பட்டார்.
இவர் ஆர்.கே.நகர் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து முறைகேடுகளைத் தடுக்க தீவிர ஆலோசனையும் நடத்தினார். பணப் பட்டுவாடா மற்றும் பரிசு பொருள்கள் விநியோகம் செய்வதைத் தடுக்க 70 நுண் பார்வையாளர்களும் பணி அமர்த்தப்பட்டனர்.
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நடிகர் சரத்குமார், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 35 இடங்களில் வருமான வரிச் சோதனை நடைபெற்றது.
.இந்த நிலையில் ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த ஆவணத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட சில அமைச்சர்கள் பெயரும் இடம் பெற்றிருந்தன.
சசிகலா அணி வேட்பாளர், டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு திரட்டுவதற்காக 89 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டதாக சோதனையில் தெரியவந்தது என வருமான வரித் துறையால், தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரியான விக்ரம் பத்ரா கடந்த சனிக்கிழமை டெல்லி புறப்பட்டு சென்றார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடந்த பணப்பட்டுவாடா மற்றும் தொகுதியில் நிலவும் அசாதாரண சூழல் பற்றி அவர் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்ததாகக் கூறப்பட்டது.
இதற்கிடையே தமிழக தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானியிடமும் இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டது. இதனை ஏற்று ராஜேஷ் லக்கானி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். விக்ரம் பத்ரா, ராஜேஷ் லக்கானி இருவரும் தேர்தல் ஆணையத்தில் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர்.

அப்போது ஆர்.கே.நகர் தேர்தலை ஒத்திவைத்து விட்டு வேறு ஒருநாளில் தேர்தலை நடத்தலாமா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
அதில் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடந்ததற்கான ஆதாரங்கள் வருமான வரி ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கு முன் தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் இதே போன்ற சூழ்நிலை ஏற்பட்டது. முறைகேடுகளை தவிர்க்க எடுக்கப்படும் முயற்சிகள் நூதன முறையில் மீறப்பட்டுள்ளன.
அரசியல் சட்டத்தின் 324 வது பிரிவின் கீழ் ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 21இல் தேர்தலை ரத்து செய்வதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா தொடர்பாக இதுவரை மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஏப்ரல் 7-ந்தேதி வரை ரூ.18,80,700 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொபைல் போன், வெள்ளித் தட்டு, புடவைகள் உள்ளிட்ட பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பணப்பட்டுவாடா தொடர்பான புகாரில் பலர் பிடிப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறும் சூழல் வந்த பிறகு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post expires at 2:50am on Wednesday May 10th, 2017

0 105
ஆர்.கே.நகர் இடை தேர்தல் நடக்குமா? ஏப்ரல் 10-ம் தேதி அறிவிக்கிறார் நஜிம் ஜைதி

ஆர்.கே நகர் இடை தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 10-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைமை ஆணையர் ஆலோசனை ஆர்.கே. நகர் இடை தேர்தலில் பணம் பட்டுவாடா குறித்து வருமானவரித்துறை சார்பில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி இரு தேர்தல் ஆணையர்களுடன் ஆலோசிக்க உள்ளார். மேலும் ஆர்.கே.நகர் தொகுதிக்கான சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம்பத்ரா மற்றும் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உடன் ஆலோசனை நடத்த உள்ளார். திங்கட்கிழமை (ஏப்ரல்-10) முடிவு? அதன் பின்னர் ஆர்.கே.நகர் இடை தேர்தல் நடத்துவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு திங்கட்கிழமை (ஏப்ரல்-10) வெளியிட உள்ளதாக தெரிகிறது.

Post expires at 6:25pm on Monday May 8th, 2017

0 175
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ஒத்திவைப்பு..?

ஆர்கே நகர் இடைதேர்தலுக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளர் விக்ரம் பத்ரா டெல்லி விரைந்தார். இவர் இன்று இரவு தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் சைதியை சந்தித்து ஆர். கே நகரில் பணபட்டுவாடா செய்திருப்பது குறித்து விளக்கம் அளிக்கிறார்.
சென்ன ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், அதிமுக அம்மா கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக அனைத்து கட்சியினரும் தேர்தல் ஆணையத்திற்கு தொடர்ந்து புகார்கள் கொடுத்து வந்தனர் .
இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் அதிமுக கட்சியை சேர்ந்து முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரிசோதனை நடத்தப்பட்டது .
அதில் முக்கிய ஆவணங்களும் சிக்கி உள்ளது .
தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்துள்ள, பணபட்டுவாடா குறித்த அறிக்கையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட 6 பேர், 89 கோடி ரூபாய்க்கும் மேல் பணபட்டுவாடா செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து, வருமான வரி சோதனையில் சிக்கிய அனைத்து ஆவணங்களின் நகல்களை எடுத்துக் கொண்டு , சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளர் விக்ரம் பத்ரா டெல்லி விரைந்தார்.
இவர் இன்று இரவு தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்து ஆர். கே நகரில் நடைபெற உள்ள இடை தேர்தலை ஒத்திவைப்பது குறித்த ஆலோசனையில் ஈடுபட உள்ளனர் .
இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் ஆர் .கே நகர் இடைதேர்தல் ஒத்திவைப்பது குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது .

Post expires at 6:13pm on Monday May 8th, 2017

0 100
லக்கானிக்கு தேர்தல் ஆணையம் அவசர அழைப்பு!! ஆர்.கே.நகர் தேர்தல் நடக்குமா?

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா நடந்ததாக கூறப்படும் புகார் குறித்து நாளை மறுநாள் (10ந் தேதி) விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து ராஜேஷ்லக்கானி டெல்லிக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடா செய்யப்படுவது குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் வருமானவரித்துறை ஒப்படைத்துள்ளது. இது தொடர்பான புகார் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என ராஜேஷ் லக்கானிக்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து ராஜேஷ் லக்கானி விளக்கம் அளிப்பதற்காக டெல்லி செல்லவுள்ளார்.
இதனால் ஆர்கே நகர் இடைத்தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Post expires at 4:30pm on Monday May 8th, 2017

0 90
ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு டிடிவி தரப்பு பணமழை பொழிந்தது எப்படி?

ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு டிடிவி தரப்பு நபர் ஒருவருக்கு ரூ.4ஆயிரம் வரை விடிய விடிய பணம் வழங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல்வர் பதவியை குறி வைத்து களம் இறங்கி இருக்கும் டிடிவி தரப்பினரால் வாக்காளர்கள் பண மழையில் நனைந்து வருதாக தேர்தல் ஆணையத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையமும் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தாலும் வெளியூரில் இருந்து வரவழைக்கப்பட்ட டிடிவி ஆதரவாளர்களால் நூதன முறையில் போலீசார் துணையுடன் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் டிடிவி தரப்பு முழு அளவில் 2 லட்சம் வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்ய திட்டமிட்டுள்ளதாக எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை நோக்கி புகார்களுடன் படையெடுத்தனர். அந்த நாள் எப்போது? எப்படி? என்ற பரபரப்பு ஆர்.கே.நகர் தொகுதியில் நிலவி வந்தது. ஆனால் எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் எதையும் கண்டு கொள்ளாத டிடிவி தரப்பு பக்கா பிளான் மூலம் தங்கள் திட்டத்தை நேற்று முன்தினம் இரவு முழுவதும் பணப்பட்டுவாடாவை நடத்தியது நாடு முழுவதும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் டிடிவி தரப்பின் அதிரடி விநியோகம் குறித்து பல்வேறு பட்டிமன்றங்களே நடத்தப்பட்டு வருகிறது. கோடிக்கணக்கான பண விநியோகம் குறித்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. அதாவது, ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள இரண்டே கால் லட்சம் வாக்காளர்களில் 2லட்சம் வாக்காளர்களுக்கு எதிர்பாராத அளவிலான பணத்தை வழங்க திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். 15 வீட்டுக்கு ஒரு பொறுப்பாளரை டிடிவி தரப்பு நியமித்துள்ளது. அவர்கள் வெளியூரை சேர்ந்தவர்கள். அவர்கள் மக்களோடு மக்களாக அந்த தொகுதியிலே கடந்த 10 நாட்களாக வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

அந்த 15 வீட்டுக்கான வாக்காளர் பட்டியல் மற்றும் அவர்களது செல்போன் எண்களையும் சேகரித்து வைத்துள்ளனர். ஏற்கனவே உள்ளூர் அதிமுக பிரமுகர்கள் மூலம் ஒருவாரத்துக்கு முன்பே பணம் தொகுதிக்குள் கொண்டு சென்று கட்சிக்காரர்கள் வீடுகளில் பதுக்கி வைத்துவிட்டனர். நேற்று முன்தினம் இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணிக்குள் பணப்பட்டுவாடாவை முடித்து விட வேண்டும் என்ற டிடிவி தரப்பில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாம். ஒவ்வொரு பொறுப்பாளரும் 2 மணி நேரத்துக்குள் அந்த 15 வீடுகளில் பணத்தை வழங்கிவிட வேண்டும் என்ற பக்கா பிளான் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களுக்கு சொல்லப்பட்டது. அந்த பொறுப்பாளர்கள் சரியாக இரவு 10 மணி முதல் தங்களுக்கு வழங்கப்பட்ட 15 வீடுகளை நோக்கி செல்ல தொடங்கினர். அவர்கள் தங்கள் கார்களை பயன்படுத்தாமல் ஆட்டோ மற்றும் பைக்குகளில் சென்றனர். அவர்கள் கையில் பணம் எதுவும் இல்லாததால் தைரியமாக போலீசார் செக்கப்பை தாண்டி உள்ளே சென்றனர். சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று அந்த பொறுப்பாளர்கள் ஏற்கனவே பணம் பதுக்கி வைக்கப்பட்ட உள்ளூர் கட்சிக்காரரிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டனர்.

இந்த பணப்பட்டுவாடா ஆபரேஷனுக்கு காவல் துறை முழு அளவில் துணை போனது குறிப்பிடத்தக்கது. ஒரு உளவுத் துறை அதிகாரி மூலம் ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனால் ரோந்து போலீசார் வேறு பகுதிகளுக்கு சென்று விட்டனர். அப்போது இந்த பொறுப்பாளர் தனக்கு ஒதுக்கப்பட்ட 15 வீடுகளுக்கு சென்று ஒரு வாக்காளருக்கு ரூ.4000 என்ற கணக்கில் பணத்தை விநியோகித்துள்ளனர். 15 வீடுகள் மட்டும் என்பதால் பல பொறுப்பாளர்கள் ஒரு மணி நேரத்துக்குள் பணத்தை விநியோகித்து விட்டனர். ஒவ்வொரு பொறுப்பாளர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. அந்த நேரத்தில் தங்கள் பணியை கன கச்சிதமாக முடித்து விட்டு உடனடியாக அங்கிருந்து பொறுப்பாளர்கள் புறப்பட்டு சென்றுவிட்டனர். சுழற்சி முறையில் நேரம் ஒதுக்கி பணப்பட்டுவாடா ஆபரேஷன் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி அனைத்து பொறுப்பாளர்களும் பணத்தை வழங்கியதால் ஒரே நாளில் அனைத்து வாக்காளர்களுக்கு பெரிய அளவிலான தொகை சென்றடைந்துள்ளது. திட்டமிட்டு சில மணி நேரத்தில் கோடிக்கணக்கான பணம் விநியோகம் செய்யப்பட்டதால் தேர்தல் அதிகாரிகளுக்கு தொகுதியில் என்ன நடந்தது என்பதே தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கள்ள நோட்டு விநியோகமா?

குறிப்பிட்ட சில மணி நேரத்துக்குள் நடத்தப்பட்ட இந்த ஆபரேஷனில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட பணம் 2ஆயிரம் ரூபாய் நோட்டுகளாகவே இருந்துள்ளது. தொகுதி மக்களின் பெரும்பாலானோர் கைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் நடமாட்டம் இருந்தது. தேர்தல் அதிகாரிகள் கையில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக பலர் பணத்தை அப்படியே பதுக்கி வைத்துள்ளனர். இந்த பணத்தில் கள்ள நோட்டுகள் கலந்திருப்பதாக நேற்று வாக்காளர்கள் மத்தியில் வதந்தி பரவியது. இதனால் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Post expires at 3:27am on Sunday May 7th, 2017

0 88
ஆர்.கே. நகர் தொகுதியில் 45 ஆயிரம் போலி வாக்காளர்கள் :

டெல்லி தலைமை தேர்தல் அலுவலகத்தில் திமுக சார்பில் திருச்சி சிவா, டிகேஎஸ்,இளங்கோவன் ஆகியோர் நேற்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். இதுகுறித்து திருச்சி சிவா கூறுகையில், ‘ஆர்கே நகர் தொகுதியில் திமுக, அதிமுக உட்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும், குறிப்பாக அதிமுக சார்பில் போட்டியிடும் தினகரன் அதிகாரிகளின் துனையோடு தேர்தல் விதி முறைகளை மீறி செயல்பட்டு வருகின்றார். மேலும்,தொகுதி வேட்பாளர் பட்டியலில் இறந்து போனவர்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்களின் பெயர்களை சேர்த்துள்ளானர்.

இதைத்தவிர தற்போது சென்னை உளவுத்துறை கூடுதல் கமிஷனராக இருக்கும் தாமரைக்கண்ணன் துணையோடு தொகுதி முழுவதும் கோடிக்கணக்கில் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர் எனவும் ஆதாரத்துடன் தலைமை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ளோம்.
தேர்தல் முறையாகவும், வெளிப்படையாகவும், கட்டுப்பாடோடும் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு தேர்தல் நடந்தால் தான் அது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என்றும், தேர்தலின் உன்மையான வாக்காளர்களின் பட்டியலை வெளிப்படையாக அனைத்து கட்சியினருக்கும் தர வேண்டும் என கூறியுள்ளோம்.
மனுவை பரிசீலித்த தேர்தல் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறினர் என திருச்சி சிவா தெரிவித்தார்.

Post expires at 3:31am on Saturday May 6th, 2017

0 118
கொளத்தூர் போல் ஆர்.கே.நகர் தொகுதி மீதும் அக்கறை: மு.க.ஸ்டாலின் உறுதி

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ராயபுரத்தில் உள்ள அறிவகத்தில் ‘‘குறைகள் நீங்கிட வசதிகள் ஏற்பட என்ற தலைப்பில்’’ ஆர்.கே.நகர் தொகுதி குடியிருப்பு நல சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தினார். இதில் ஸ்டாலின் பேசியதாவது: எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் தினமும் மக்களின் பிரச்னைகளை பற்றி கூறி வருகின்றேன். திமுக ஆட்சியின் போது நடந்த பணிகள் இப்போது முடங்கிவிட்டன. ஆர்.கே.நகர் ஜெயலலிதா தொகுதி. ஆனால் இதைவிட மோசமான தொகுதி வேறு எதுவும் இல்லை. திமுக ஆட்சிக்கு வரும் போது போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் பாலம் கட்டுவோம். ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக விமர்சித்தாலும், மருத்துவமனை சென்று அவரது உடல் நலம் பற்றி விசாரித்தேன், அவரை சந்தித்து சுனாமி நிதி வழங்கினேன்.
அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினேன்.

ஆர்.கே.நகரில் பெரா அணியும் மணல் மாபியா அணியும் போட்டியிடுகின்றன. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 75 நாளிலும் முதல்வராக இருந்த 64 நாளிலும் ஓபிஎஸ் வாய் திறக்கவில்லை. ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறினார்கள். இதை நான் கேள்வி பட்டதும் போலீஸ் கமிஷனரிடமும் தலைமை தேர்தல் அதிகாரியிடமும் பேசினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக மிகப்பெரிய வெற்றிப்பெறும். மக்கள் தேர்தலில் தெளிவான பாடம் கற்பிக்க தயாராக இருக்கிறார்கள். மருது கணேஷ் வெற்றிப்பெற்றால் நானும் இத்தொகுதி எம்எல்ஏவாக செயல்படுவேன். கொளத்தூர் போல இந்த தொகுதி மீது அக்கறை செலுத்துவேன். எம்எல்ஏக்கள் மக்களை சந்திக்காவிட்டால் நடவடிக்கை எடுப்பேன்.

Post expires at 2:50pm on Friday May 5th, 2017

0 80
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கள்ள ஓட்டை தடுக்க மெகா சைஸ் பூத் சிலிப்

ஆர்.கே.நகர் தொகுதியில் கள்ள ஓட்டை தடுக்க மெகா சைஸ் பூத் சிலிப் வழங்கி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஸ்டாம்ப் சைஸ் புகைப்படம் அடங்கிய பூத் சிலிப் வாக்காளர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்தது. இந்த பூத் சிலிப்பில் உள்ள புகைப்படத்தின் மேல் பகுதியில் மற்றொரு புகைப்படத்தை வைத்து ஜெராக்ஸ் எடுத்து, வாக்குச்சாவடி அதிகாரியிடம் காட்டி கள்ள ஓட்டுப்போட கடந்த தேர்தல்களில் முயற்சி செய்தார்கள். இதுபோன்ற பிரச்னைகளை தடுக்க, ஆர்.கே.நகரில் வழக்கமாக வழங்கப்படுவது போன்ற பூத் சிலிப் வழங்காமல், மெகா சைஸ் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் நேற்று முன்தினம் முதல் தேர்தல் ஆணையம் வழங்கி வருகிறது.

இந்த பூத் சிலிப்பில் உள்ள படம் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை விட பெரிய அளவில் இருக்கும். அதனால், கள்ள ஓட்டு போட நினைப்பவர்கள் தங்களிடம் உள்ள பாஸ்போர்ட் அல்லது ஸ்டாம்ப் சைஸ் புகைப்படத்தை இந்த பூத் சிலிப்பில் வைத்து ஜெராக்ஸ் எடுக்க முடியாது. மேலும், பூத் சிலிப் பின்புறம் வாக்குச்சாவடி நிலைய அலுவலர் பெயர் மற்றும் அவரது செல்போன் எண்கள் இடம்பெற்றிருக்கும். ஏதாவது பிரச்னை என்றால், வாக்காளர்கள் உடனடியாக வாக்குச்சாவடி நிலைய அலுவலர் செல்போன் எண்ணுக்கு தெரிவிக்கலாம்.

Post expires at 4:30am on Friday May 5th, 2017

0 76
ஆர்.கே. நகர்: பெண்ணை தாக்கியதாக அமைச்சர் மீது வழக்குப் பதிவு..!

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த பெண் ஒருவரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளும் கடும் பிரச்சாரத்தில் இறங்கியிருக்கின்றன என்றாலும் அதிமுகவின் சசிகலா மற்றும் ஓ.பி.எஸ். அணிகள் போட்டி போட்டு பிரச்சாரம் செய்து வருகின்றன., இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம், கைகலப்பு நடைபெறுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

அப்போது சசிகலா அணி வேட்பாளர் டிடிவி தினகரன் தரப்பைச் சேர்ந்த தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஓ.பி.எஸ் தரப்பைச் சேர்ந்த உமையாள் என்ற பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அந்த பெண் வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர், அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
“எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ததோடு நின்றுவிடாமல் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம்” என்று ஓ.பி.எஸ். அணியினர் தெரிவித்துள்ளனர்.

Post expires at 4:34pm on Thursday May 4th, 2017

RANDOM POSTS

0 203
சாஸ்திரங்களின் படி, நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்களும் நம்மைப் பற்றிய சில ரகசியங்களைக் கூறும். அதில் பிடித்த நிறங்கள் முதல், பழக்கவழக்கங்கள் வரை ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் குணாதிசயங்களை வெளிக்காட்டும். குளிக்கும் போது, ஆரம்பத்தில் ஒவ்வொருவரும்...