Timber by EMSIEN-3 LTD
அரசியல்

0 886
ஜெ., உடல் மாறுச்சு.! முகம் கருப்பேறிச்சு..! எங்கக்கிட்ட போட்டோ வீடியோ இருக்கு..! சீனிவாசன்

தமிழகம் முழுவதும் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றபோது ஏன் படம் எடுக்கவில்லை. ஏன் வீடியோ எடுக்கவில்லை என்று பலர் கேள்விகள் எழுப்பிவந்தனா்.

இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது. அப்போது அங்கு மருத்துவமனை தரப்பில் வீடியோ எடுக்கவில்லை. போட்டோ எடுக்கவில்லை. ஜெயலலிதா எடுக்கவேண்டாம் என்று கூறினார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று திண்டுக்கல்லில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள்விழா பொதுக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சரும் அதிமுகவின் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். அப்போது அவா் கூறியதாவது:

நானே 15 நாட்கள் மருத்துவமனையில் இருந்தால் சேவ் செய்யாமல், முடிவளா்ந்து, முடிக்கு மை அடிக்காமல் இருந்தால் யாருப்பா இங்க சீனினு மக்கள் கேட்பாங்க?

மருத்துவமனையில் ஜெயலலிதா உடல் மாறுச்சு. ஊசி, மருந்தால் முகங்கள் கருப்பேறிச்சு. அவங்க இயற்கையிலேயே அழகுதான்.

ஆனா, அவங்க உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில, பெட்லேயே படுத்திருக்கும் போது, எப்படியெல்லாம் முகங்கள் இருக்கும்ங்கிறது நம்ம எல்லாத்துக்கும் தெரியும்.

அப்பவும் கூட போட்டோ எடுத்துப்போடலாம்னு அப்போலா ஆஸ்பத்திரி சேர்மன் மற்றும் எங்களைப் போன்றவர்கள் எல்லாம், ‘‘ அம்மா, நீங்க நலமா இருக்கீங்கங்கிறதை போட்டோ எடுத்து பேப்பர்ல போடலாமா?”னு கேட்டோம்.

அதுக்கு அவங்க, ‘‘ சீனிவாசன், நீங்கள்லாம் இதுக்கு முன்னாடி என்னை எப்படி பார்த்திருக்கீங்க.

இப்ப நான் இருக்கற நிலை என்னா? நான் உடல்நிலை தேறி, குளிச்சி முழுகி, நல்லா டிரஸ் பண்ணிகிட்டு, நானே வந்து வெளிய நிண்ணு எல்லாத்துக்கும் வாழ்த்து சொல்வேன்.

அதுவரைக்கும் பொறுமையாக இருங்க. பெண்கள், அம்மா இப்படி ஆகிட்டாங்களேனு நினைப்பாங்க. அதுனால உடல்தேறி வரட்டும் பார்த்துக்கலாம். அதுவரைக்கும் புகைப்படம் எடுக்காதீங்க‘‘னு சொல்லிட்டாங்க.

அவங்களுக்கு சிகிச்சை செய்யும்போது போட்டோ, வீடியோ எல்லாம் எடுத்து வைச்சிருக்கு. ரொம்ப தேவைப்பட்டா அதைப் போட்டு காட்டுவாங்க. இவ்வாறு அவர் பேசினார்.

முதல் முறையாக ஜெயலலிதா குறித்து புகைப்படம், வீடியோ இருப்பது அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் மூலமாக வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது. அது தேவைப்படும்போது வெளியில் காட்டப்படும் என்றும் அவரால் கூறப்பட்டது. இது அதிமுகவினரிடையே அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலங்களவை அத்துடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை சார்பில் ஜெயலலிதா போட்டோ எடுக்க வேண்டாம் என்று கூறியதால் எடுக்கவில்லை என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பேச்சு அப்போலோவுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post expires at 2:48pm on Saturday March 25th, 2017

0 400
சசிகலா... ஏன் ‘சதி’கலா ஆனார்...? - ‘சசிகலா உளவியல்’

சசிகலாவுக்கு… எதுமாதிரியான உளவியல் தஞ்சாவூர் விளாரில் குடிபுகுந்தவரை இன்று பரப்பன அக்ரஹார சிறைவரை இழுத்துச் சென்றுள்ளது?

“காட்டுமிராண்டித்தனமான அன்பு!”

‘பழிவாங்குவதிலும், காதலிலும் பெண்கள் ஆண்களைவிடக் காட்டுமிராண்டிகள்’ ‘நன்மை தீமையைக் கடந்து’ (Beyond Good and Evil) என்ற நூலில் ஃப்ரெட்ரிக் நீட்ஷே இப்படி எழுதியிருப்பார். எல்லாப் பெண்களும் அப்படியா என்று தெரியவில்லை. ஆனால், சசிகலா விஷயத்தில் இது மிகச் சரியாகப் பொருந்துகிறது. தம்பி, கணவன், குடும்பத்தின் மீதிருந்த காட்டுத்தனமான அன்பு, அவரை அலைக்கழித்திருக்கிறது… தன் சுயத்தைக் கரைத்து திவாகரன், நடராஜன், தினகரன் எல்லாம் சொல்வதுபோல நடக்கவைத்திருக்கிறது. இப்போது, நீதிமன்றத்துக்கும்… சிறைக்குமென நடையாய் நடக்கவும் வைத்துக்கொண்டிருக்கிறது. மீண்டும் ஓர் ஆங்கில இலக்கியத்திலிருந்தே மேற்கோள் காட்டுகிறேன். வாஷிங்டென் எர்விங், ‘ஸ்கெட்ச் புக்’ என்ற நூலில், ‘’ஒரு பெண்ணின் முழு வாழ்க்கையும் பாசத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது’’ என்பார். சசிகலாவின் பாசம் விளாரிலும், மன்னார்குடியிலும் கட்டமைக்கப்பட்டிருந்தது. அந்த அன்புதான் உருமாறி  ‘சசி என்டர்பிரைசஸ்’ – ஆக எழுந்து நின்று, இவரை வீதிக்கு இழுத்திருக்கிறது.

சசிகலாவின் உளவியலைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், முதலில் நடராஜனின் உளவியலைப் புரிந்துகொள்ள வேண்டும். நடராஜன் தன் கல்லூரிக் காலத்திலேயே முழுமையாக அரசியலடைந்தவர்; இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்; இதை எல்லாம் கடந்து, எதையும் பின்னால் இருந்து இயக்கத் தெரிந்தவர்; அப்படி இயக்கவே விரும்புபவர். இப்படியானவரைக் கிராமத்துப் பின்புலத்திலிருந்து வந்த சசிகலா திருமணம் செய்துகொள்கிறார்.

மாவட்டத் தகவல் தொடர்பாளாராக இருந்த நடராஜன், ஆட்சியர் சந்திரலேகா அறிமுகம்… பின்னாளில், ஜெயலலிதா – நடராஜன் அறிமுகம் ஏற்படக் காரணமாகிறது. இது, சசிகலா – ஜெயலலிதா நட்பாக மாறுகிறது. எல்லாவற்றையும் பின்னால் இருந்தே இயக்க விரும்பிய நடராஜன், ஜெயலலிதாவையும்…. அதன் மூலமாக ஆட்சியையும் பின்னால் இருந்து இயக்கத் தொடங்குகிறார். மெதுவாக, அன்பு… அதிகாரம் என்கிற இடத்துக்கு நகர்கிறது.

“எல்லாவற்றையும் கைப்பற்று!”

கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். கடந்த காலம் முழுவதும் நீங்கள் அடக்கி ஆளப்பட்டிருக்கிறீர்கள். உங்களைத் துச்சம் எனக் கருதி இருக்கிறார்கள். உங்களை யாரும் மதிக்கவில்லை. திடீரென ஒரு நன்னாளில், உங்களுக்கு அதிகாரம் கிடைக்கிறது… சர்வ அதிகாரமும் கிடைக்கிறது. இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? சசிகலாவுக்கு இதுதான் நிகழ்ந்தது.

ஆண் அதிகாரம் அழுத்தமாக இருக்கும் ஒரு பின்னணி. தன் சுயத்தை முன்னிறுத்தும் கல்வியும் இல்லை. இப்படியானவருக்கு இந்திய அளவில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒருவரின் நிழலாக இருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது… அதிகாரம் கிடைக்கிறது. அதிகாரத்தின் சுவை தித்திப்பாக இருக்கிறது. அதைப் பயன்படுத்த விரும்புகிறார். பின், முழுவதுமாகப் பயன்படுத்தவும் செய்கிறார். அதைப் பயன்படுத்தி அனைத்தையும் கைப்பற்றவும் செய்கிறார்.

அந்த அதிகாரம் பணத்தை கொண்டுவந்து சேர்கிறது. பணம் என்றால் கொஞ்சம் நஞ்சம் அல்ல….. கண்டங்கள் தாண்டி முதலீடு நீளும் அளவுக்குப் பணத்தைக் கொண்டுவந்து சேர்க்கிறது. ‘‘பணம்… பணம்… பணம்…’ என்று பணத்தை குறியாகவைத்தே இந்தச் சதிகாரர்கள் தங்களது வேலைகளைச் செய்துள்ளார்கள்’’  என்று உச்ச நீதிமன்றம் சொல்லும் அளவுக்கு பணத்தைக் கொண்டுவந்து சேர்க்கிறது. இப்போது, அவர்கள் சேர்த்த பணம், தன்னைக் காத்துக்கொள்ள இவர் மீது கண்ணுக்குத் தெரியாமல் அதிகாரம் செலுத்துகிறது. அந்த அதிகாரம்தான் இன்று எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது. அ.தி.மு.க உட்பட.

‘‘அன்பும், அதிகாரமும்!’’

சசிகலா, புனிதவதி என்பதற்காக இந்தக் கட்டுரை அல்ல… ஆனால், எவரையும் நாம் தட்டையாகப் புரிந்துகொள்ள வேண்டாம். நீதிமன்றம் சொன்னதுபோல இவர்கள் சம்பாதிக்கவே ஜெயலலிதா வீட்டில் சதித் திட்டம் போட்டிருக்கிறார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், எந்த உளவியல் இவரை, இதை எல்லாம் செய்யத் தூண்டியது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஜெயலலிதாவுக்குக் குடும்பம் இல்லை என்றால், சசிகலா கணவருடன் வாழவில்லை… குழந்தை இல்லை. பின், ஏன் சசிகலா…’சதி’ கலா ஆனார்? நிச்சயம், குடும்பத்தின் மீதான காட்டுத்தனமான அன்பும், அதிகாரத்தின் மீதான மோகமும் மட்டும்தான். நடராஜன், திவாகரன், தினகரன்… இது அவருடைய பலப்பட்டியல் அல்ல… இதுவே அவரது பலவீனப் பட்டியல்.  இன்று அவர்கள்,  ’பத்திரமா போயிட்டு வாங்கக்கா…’  என்று வழியனுப்பிவைக்க… சசிகலா சிறை செல்கிறார்.

 

இதை எல்லாம் கடந்து சசிகலாவிடம் இருக்கும் பிரச்னை என்னவென்றால், தன் உளவியல் சிக்கலை இன்னும் அவர் புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான். அதனால்தான், இப்போதும் தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்துவிட்டு போகிறார். இதுதான் பேராபத்தானது.

ஹூம்… சொல்ல மறந்துவிட்டேன். சசிகலா, இவ்வாறாக நடந்துகொண்டதற்குப் பின்னால் அவருடைய உளவியல் மட்டும் அல்ல… நம் உளவியலும் இருக்கிறது… நம் மத்தியதர வர்க்கத்தின் பொது உளவியல்…  ‘பயம்’.  அதிகாரத்தைக் கேள்விகேட்க பயம்.

Post expires at 1:44pm on Wednesday March 22nd, 2017

0 3993
ஜெ., உடலை எப்படியெல்லாம் சித்ரவதை!? மரண அதிர்ச்சி; வெளிச்சமாக்கும் சிகிச்சை குழு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டதிலிருந்து, டிசம்பர் 5ம் தேதி எவ்வாறு இறந்தார் என்பது வரை பல அதிர்ச்சி தரும் தகவல்களை மக்களிடையே வெளிச்சாமாக்கி காட்டுகிறார்கள் இந்த சிகிச்சை குழு டாக்டர்கள்.

இதுகுறித்து, விகடன் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்…

“மறைந்த முதலமைச்சர் அறிஞர் அண்ணா உணவுக்குழல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதனை சரி செய்வதற்காக அவர் வெளிநாடு சென்றார். அவருக்கு கதிர்வீச்சு மற்றும் புற்றுமருந்து சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன. எனினும் அவரது நோய் குணமாகவில்லை. நாடு திரும்பிய அவருக்கு மீண்டும் பல மருத்துவ சிக்கல்கள் ஏற்பட்டன. அவற்றை அகற்றுவதற்காக மீண்டும் கதிர்வீச்சு சிகிச்சையையே அவர் மேற்கொள்ள வேண்டும் என்று வெளிநாட்டு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அவரது சிகிச்சையை மேற்பார்வையிட மாநிலம் தழுவிய மருத்துவர் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. அதில் பங்கேற்ற எங்கள் ஆசிரியர் மருத்துவர் ஆர்.சுப்பிரமணியம், ‘மறு கதிர்வீச்சு சிகிச்சை வேண்டாம்’ என்று எச்சரித்தார். ‘ ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்ட கதிர்வீச்சின் உச்சபட்ச அளவினை அண்ணா பெற்றிருக்கின்றபடியால், அதனை மீண்டும் கொடுக்கக் கூடாது. மீறிக் கொடுத்தால் கடுமையான பின்விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும்” என்பதே அவரது எச்சரிக்கையின் சாரம்.

ஆனாலும், வெளிநாட்டு மருத்துவர்களின் பரிந்துரையே நடைமுறைப்படுத்தப்பட்டது. எங்கள் ஆசிரியரின் எச்சரிக்கை உண்மையாகியது. கதிர்வீச்சால் உருவான பெர்கார்டிடிஸ்(Pericarditis) நோயால் அண்ணா தாக்கப்பட்டார். 1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதியன்று அவரது உயிர் பிரிந்தது. ‘இந்தச் செய்தியைத் தமிழ்நாட்டு மக்கள் அறிய மாட்டார்கள். ஏனெனில் அதனைப் பொதுவெளியில் வைத்து விவாதிக்க எவரும் முயற்சி மேற்கொள்ளவில்லை. இதனை நீங்கள் ஒருபோதும் மறக்கக்கூடாது. செய்த தவறுகளையே திரும்பத் திரும்பச் செய்து வாழ்வை வீணடிக்கக் கூடாது என்பதை நீங்கள் நினைவுகொள்ள வேண்டும்’ என்ற அறிவுரையை எங்களுக்கு வழங்கிச் சென்றார், மக்கள் மீதும் மருத்துவத்தின் மீதும் காதல் கொண்ட எங்கள் ஆசிரியர் சுப்பிரமணியம்.

அவரது கூற்றுப்படியே ஜெயலலிதாவின் மரணம் குறித்து தீவிர தேடுதலில் இறங்கினோம். அவரது மரணம் நேர்மையாக அமையவில்லை என்பதை ஆய்வின் முடிவில் கண்டறிந்தோம்” – கவலை தோய்ந்த முகத்துடன் நம்மிடம் பேசினார் கோவையைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ். இவரும் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தியும், ‘ தமிழக முதல்வரும் கேள்விக்குள்ளாக்கப்பட்ட அவரது உடல்நிலையும்’ என்ற தலைப்பில் ஆய்வை நடத்தி முடித்துள்ளனர்.

மெட்ரோ விழாவும் ஜெயலலிதாவும்…!

“தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதியன்று இரவு 11.30 மணிக்கு மாரடைப்பால் (Cardiac Arrest) சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார்’ என்று அந்த மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்தது. அவரது மரணம் நிகழ்ந்து 60 நாட்களுக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தனர் டாக்டர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவக் குழுவினர். அந்த நிகழ்வில் பேசிய மருத்துவர் ரிச்சர்ட் பீலே, ‘ முதல்வருக்கு வீட்டில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டபோது அவரது மூச்சுத்திணறல் மேலும் அதிகமாகியது. அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவரது மூச்சு மண்டலம் திடீரென்று செயலிழந்துபோனதுதான் (Acute Respiratory Failure) அவருக்கு ஏற்பட்டுள்ள மூச்சுத் திணறலுக்கான காரணம் என்ற முதல்கட்ட முடிவுக்கு வந்தனர். ‘திடீரென்று அவரது மூச்சு மண்டலம் ஏன் செயலிழந்து போக வேண்டும்’ என்ற கேள்விக்கான பதிலை அவர்கள் தேடுகையில், ‘கிருமித் தொற்றுதான் (Infection) அதற்கான காரணம்’ என்ற முடிவை எட்டினர்.

‘இந்தக் கிருமித் தொற்றானது சிறுநீரகம் அல்லது நுரையீரலில் துவங்கியிருக்கலாம்’ என்று கருதினர். இதனை உறுதி செய்வதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டபோது அவரது ரத்தத்திலேயே பாக்டீரியா கிருமித் தொற்று இருப்பதை அறிய முடிந்தது. ‘இந்தக் கிருமிகள் அவரது இருதயத்தின் உள் அடுக்கில் குடிகொண்டு Endocarditis (இருதய உள்ளடுக்கு அழற்சி) என்ற பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன’ என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. மேலும், இந்தக் கிருமித் தொற்றானது உடலின் நோய் எதிர்ப்புக் கட்டமைப்புகளையும் முடுக்கிவிட்டிருந்தது; அவை நோயை எதிர்த்ததோடு நிற்காமல் அவரது உடல் உறுப்புக்கள் பலவற்றையும் தாக்கத் தொடங்கியிருந்தன என்பதை அறிந்துகொண்டனர். இந்த செயல்பாடே செப்சிஸ்(Sepsis) என்று அழைக்கப்படுகிறது. இதுவே முதல்வரின் மூச்சு மண்டலத்தைத் தாக்கியிருப்பதையும் அதன் விளைவாகவே அந்த மண்டலம் திடீரென்று செயலிழந்து போயிருப்பதையும் அவர்கள் அறிந்து கொண்டனர். இதன் காரணமாக அவருக்குக் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டிருந்தது. கூடுதலாக, முதல்வருக்கு இருந்த பிற நோய்களான உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவையும் இந்தப் பிரச்னைகளை சிக்கலாக்கின’ என்றார்.

“அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு முதல்வர் கொண்டுவரப்பட்டபோது அவர் அரைத் தூக்க நிலையில்(drowsy) இருந்தார். முதல் ஆறு நாட்களுக்கு மாஸ்க் மூலம் பிராண வாயுவைக் கொடுத்தோம். அதன்பிறகும் அவரது மூச்சுத் திணறல் குறையவில்லை; எனவே, அவரது மூச்சுக் குழாய்க்குள் செயற்கை மூச்சுக் குழாய் நுழைக்கப்பட்டு(intubate) செயற்கை சுவாசக் கருவியுடன் (ventilator) இணைக்கப்படவேண்டி வந்தது. இதன் பிறகும் கூட அவரது மூச்சுத் திணறல் குறையவில்லை. செயற்கை மூச்சுக்குழாய் நுழைக்கப்பட்டதற்கு 10 நாட்களுக்குப் பிறகு அவரது மூச்சுக் குழாயிலேயே துளைபோட்டு (Tracheostomy) செயற்கை சுவாசக் கருவியுடன் இணைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது”- இது மருத்துவர் பாபு ஆப்ரஹாமின் கூற்று.

“முதல்வர் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தபோது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கட்டுபடுத்தப்படாத சர்க்கரை நோய் மற்றும் சிறுநீர்த் தொற்று இருந்ததை அறிந்து  கொண்டோம்”-இது டாக்டர். பாலாஜியின் வாதம்.

இவர்கள் மூன்றுபேரும் கூறிய தகவல்கள் தமிழகப் பத்திரிகைகளில் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி 30-ம் தேதிக்குள் வெளிவந்த பெரும்பாலான தகவல்களோடு ஒத்துப்போகின்றன என்பதை நாம் இங்கு கூறியே ஆக வேண்டும். இதே பத்திரிகைகளில், ‘முதல்வர் அப்போலோவில் அனுமதிக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பாகவே காய்ச்சலால் அவதியுற்றார்’ என்ற செய்திகள் உள்ளன. செப்டம்பர் 21-ம் தேதியன்று அவரால் திறக்கப்படவிருந்த 107 அம்மா உணவகங்களுக்கான திறப்புவிழா நிகழ்ச்சி காரணம் ஏதுமின்றி ரத்து செய்யப்பட்டது என்பதும், அதேநாளில் மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்ட மெட்ரோ ரயில் துவக்கவிழா நிகழ்ச்சியில் மிகவும் சிரமப்பட்டே அவர் கலந்துகொண்டார் என்பதும் அவருக்கு இருந்துவந்த உடல் நலப்பிரச்னைகளால்கூட இருந்திருக்கக் கூடும் என்றே கருதத் தோன்றுகிறது. ‘அவருக்கு ஏற்கெனவே இருந்து வந்த பிரச்னைகளைத் திறம்பட கையாளாமல், தாமதமாக மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றதே அனைத்துக் குளறுபடிகளுக்கும் காரணம்’ என்ற வாதத்தை மேம்போக்காகக் கடந்துசென்றுவிட முடியாது” என ஆதங்கத்தோடு பேசத் தொடங்கினார் மருத்துவர் புகழேந்தி. தொடர்ந்து ஆய்வு முடிவுகளை நம்மிடம் பட்டியலிட்டார்.

சசிகலா செய்த தாமதம்?

தனியார் தொலைக்காட்சியின் நெறியாளர் ஒருவர், சசிகலாவிடம் 2017 பிப்ரவரி 8-ம் தேதியன்று நடத்திய நேர்காணல் நிகழ்ச்சியில், ‘ மருத்துவமனைக்கு முதல்வரைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதா’ என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு, “தாமதமின்றி, உடனடியாகக் கொண்டுவந்துவிட்டீர்கள். அதனால் பிரச்னை இல்லை என்று அப்போலோ மருத்துவர்கள் 23-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு என்னிடம் கூறினார்கள்” என்ற பதிலை சசிகலா அளித்துள்ளார். ஆனால், முதல்வரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் அதனால் ஏற்பட வாய்ப்புள்ள விளைவுகள் குறித்து செய்தியாளர் சந்திப்பின்போது பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது, “முன்கூட்டியே முதல்வரைக் கொண்டுவந்திருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்க முடியுமா என்பது அனுமானம் தொடர்பான கேள்வி; என்னால் அதற்கு பதிலளிக்க முடியாது; மேலும் எமது பணி முதல்வர் மருத்துவமனைக்கு வந்த பிறகே என்பதால், அதுகுறித்த கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும்” என்றும் டாக்டர். பாபு ஆப்ரஹாம் பதிலளித்தார். ஆனால், நோயாளியை மருத்துவர் ஒருவர் புதிதாகப் பரிசோதனை செய்யும்போது அந்த நோயாளியின் மருத்துவ மற்றும் உடல்நலம் குறித்த வரலாறு அனைத்தையும் மருத்துவர் சேகரித்தாக வேண்டும் என்பதும் இந்தத் தகவல்கள் அந்த நோயாளியின் சிகிச்சைக்கு இன்றியமையாதவை என்பதும் பாபு ஆப்ரஹாம் அறியாததல்ல. அப்போலோ மருத்துவமனையில் உலகத்தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்றும் முதல்வருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை ஒரு திறந்த புத்தகம் என்றும் அந்த மருத்துவமனை நிர்வாகமே கூறிவருகிறது. அப்படி இருக்கும்போது டாக்டர்.பாபு ஆப்ரஹாமோ அவரைச் சார்ந்தவர்களோ மேற்கூறிய தகவல்களை பொதுவெளியில் வைக்க ஏன் தயங்க வேண்டும்?

அலைக்கழித்த அப்போலோ!

செய்தியாளர் சந்திப்பில் மருத்துவர்கள் முன்வைத்த தகவல்களில் பெரும்பாலான தகவல்களை, பல்வேறு நாட்களில் அப்போலோ மருத்துவமனையால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்புகளில் காணமுடியவில்லை. “அரைத் தூக்க நிலை, மூச்சுத் திணறல், மூச்சு மண்டல செயலிழப்பு, கிருமித் தொற்று, கிருமித் தொற்றால் தூண்டப்படும் உடலின் எதிர்வினைகளால் ஏற்படும் விளைவு (Sepsis), கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு, இருதய உள் அடுக்கு அழற்சி (Endocarditis), எளிய பிராண வாயு சிகிச்சை, கிருமிகளைக் கண்டறியத் தேவையான பரிசோதனைகள்” -ஆகியவையே செப்டம்பர் 22-29-ம் தேதிவரை நடந்த நிகழ்வுகள் என்று 2017 பிப்ரவரி 6 அன்று செய்தியாளர்கள் சந்திப்பில்  கலந்துகொண்ட டாக்டர் பீலே மற்றும் பாபு ஆப்ரஹாம், பாலாஜி ஆகியோர் கூறினர். இந்தக் காலகட்டத்தை முதல் காலகட்டம் என்று அழைப்போம். ஆனால் அப்போலோ மருத்துவமனையால் இந்த முதல் காலகட்டத்தின்போது (செப்டம்பர் 22-29) முன்வைக்கப்பட்ட செய்திக்குறிப்புகளில் இவை எதுவும் இடம் பெறவில்லை. மாறாக. ‘காய்ச்சல்; நீர்ச்சத்துக் குறைவு; பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; சிகிச்சையால் உடல் நலம் நன்றாக முன்னேறிக்கொண்டிருக்கிறது; வழக்கமான உணவை உட்கொள்ளத் தொடங்கியுள்ளார்’  என்ற குறிப்புகளையே காணமுடிகிறது. முதலாம் காலகட்டத்தின்போது, ‘முதல்வருக்கு காய்ச்சல் குறைந்தது என்றும், ஆனால் அவரது மூச்சுத் திணறல் கூடுதலாகிப் போனது என்றும், அதனால் எளிய முறையில் அளிக்கப்பட்டுவந்த பிராண வாயுவிற்குப் பதிலாக, மூச்சுக்குழாய்க்குள் செயற்கை மூச்சுக்குழாயை நுழைத்து அதனை செயற்கை சுவாசக் கருவியுடன் இணைக்க வேண்டி வந்தது’ என்று செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் அப்போலோ அறிக்கைகளோ இந்த முதலாம் காலகட்டத்தின்போது முதல்வரின் உடல்நலம் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தது என்றே அறிவித்தது. 2016 செப்டம்பர் 30-ல் இருந்து அக்டோபர் 7-ம் தேதிவரை உள்ள காலகட்டத்தை இரண்டாம் கால கட்டமாகக் கொள்ளலாம். முதல்வரது மூச்சுக்குழாய்க்குள் செயற்கை மூச்சுக்குழாயை நுழைத்து அதனை செயற்கை சுவாசக் கருவியுடன் இணைத்ததில் இருந்து (endotracheal intubation) மூச்சுக் குழாயில் துளையிட்டு (Tracheostomy) அதனை செயற்கை சுவாசக் கருவியுடன் இணைக்கும் செயல்பாடு வரை உள்ள காலகட்டமே இது. இந்த இரண்டாம் காலகட்டத்தின்போது -அதாவது அக்டோபர் 2,3,4 மற்றும் 6-ம் தேதியன்று அப்போலோ மருத்துவமனையால் வெளியிடப்பட்ட அறிக்கைகளில்-‘முதல்வரது உடல்நிலை தொடர்ச்சியாக முன்னேற்றம் அடைந்து வருவதாகவே’ கூறப்பட்டது. ஆனால் முதல்வருக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் பிப்ரவரி 6-ம் தேதியன்று இந்த காலகட்டத்தைப் பற்றிக் கூறும்போது, ‘முதல்வரின் மூச்சுத் திணறல் வெகுவேகமாக மோசமடைந்து கொண்டிருந்தது’ என்றனர்; இதன் காரணமே, செப்டம்பர் 29-ம் தேதியன்று செயற்கை மூச்சுக் குழாயை அவரது மூச்சுக் குழாய்க்குள் நுழைத்தும் பின்னர் அது எதிர்பார்த்த பலனைத் தராத காரணத்தால் அக்டோபர் 7-ம் தேதியன்று அவரது மூச்சுக்குழாய் துவாரமிடப்பட்டது என்றும் கூறினர்.

முதல்வரின் மூச்சுக் குழாய் துளையிடப்பட்ட நாளுக்கு அடுத்த நாளான அக்டோபர் 8-ம் தேதியில் இருந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நாளான டிசம்பர் 4-ம் தேதிவரை உள்ள காலகட்டத்தினை மூன்றாம் காலகட்டம் என்று கொள்ளலாம். இந்தக் காலகட்டத்தின்போது இரு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் பெரிதளவில் மாறுபடவில்லை.

எப்போது இயங்கியது எக்மோ?

அப்போலோ அறிக்கைகளின்படியும் பிப்ரவரி 6-ம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மருத்துவர்களின் விளக்கத்தின்படியும் ‘ அக்டோபர் மாத இறுதியில் இருந்தே முதல்வரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. என்றாலும் கூட, டிசம்பர் 4-ம் தேதி மாலை சுமார் 4.30 மணி அளவில் அவரது இருதயம் திடீரென செயலற்றுப்போய், துடிப்பதை நிறுத்திக் கொண்டு விட்டது’ என்றும் அவர்கள் கூறினர். நின்றுபோன இருதயத்தை மீண்டும் செயல்பட வைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் முதல்வருக்கு ஏற்கெனவே இருந்து வந்த நோய்கள் காரணமாகவே (அவை என்ன என்பதை அந்த அறிக்கை தெரிவிக்கவில்லை) தோல்வியில் முடிந்தன என்று அப்போலோ நிர்வாகத்தின் டிசம்பர் 5-ம் தேதிக்கான அறிக்கை கூறியது.

இதுவரை நன்றாக இருந்து வந்த முதல்வரின் இருதயம் திடீரென்று செயலிழந்து நின்றுபோனதற்கான (Cardiac Arrest) காரணம் தங்களுக்குத் தெரியாது என்று மருத்துவர் பீலேயும், பாபு ஆப்ரஹாமும் அடித்துக் கூறினார்கள். ‘ முதல்வரின் வயது, அவரது இருதயத்தைப் பாதித்திருந்த கிருமித் தொற்று, கிருமித் தொற்றினால் ஏற்பட்ட உடலின் எதிர் விளைவுகள், அவரைப் பல ஆண்டுகள் பாதித்திருந்த சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்கள் ஆகியவற்றால் ஒருவேளை இது நிகழ்ந்திருக்கலாம் என்றாலும் உறுதியாகக் கூற இயலாது’ என்று டாக்டர் பீலே கூறினார்.

‘ முதல்வரின் இருதயம் செயலிழந்து நின்ற பிறகு அதனை மீண்டும் இயங்கச் செய்யும் நடவடிக்கைகள் (Cardio Pulmonary Resuscitation-CPR) உடனடியாக எடுக்கப்பட்டது’ என்று பாபு ஆப்ரஹாம் கூறினார். இந்த நடவடிக்கை 20 நிமிடம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இறுதியில் அதனால் பலனில்லை (Refractory Cardiac Arrest – CPR நடவடிக்கைக்கு 15 நிமிடங்களுக்கு மேலும் இருதயம் செயல்படாது நிற்கும் நிலை) என்று அறிந்த உடனேயே, முதல்வர் இருந்த அறையிலேயே தயாராக வைக்கப்பட்டிருந்த ( உடம்பிற்கு வெளியில் நுரையீரலாக செயல்பட்டு உடல் உறுப்புகளுக்குத் தேவையான பிராண வாயுவினை அளிக்கும்) ECMO (Extra Corporeal Membrane Oxygenation)  கருவியுடன் முதல்வரின் ரத்த நாளங்கள் இணைக்கப்பட்டன’ என்றார்; ‘அடுத்த 24 மணி நேரம் அந்தக் கருவி இயக்கப்பட்ட பிறகும்கூட முதல்வரின் இருதயத்தால் மீண்டும் இயங்கமுடியவில்லை என்பதால் வேறு வழியின்றி அவரை மீட்க விளையும் மருத்துவ நடவடிக்கைகளை நாங்கள் நிறுத்திக் கொண்டோம்’ என்று கூறினார்.

இந்த நடவடிக்கையை சந்தேகத்துக்கு இடமின்றி விளங்கிக் கொள்ள மேலும் சில தகவல்களை அவர் அளித்திருக்க வேண்டும். ‘இருதயம் செயலிழந்து போயுள்ளது’ என்பதை அறிந்த உடன் அடுத்த 20 நிமிடங்களுக்கு CPR நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நின்றுபோன இருதயத்தை மீண்டும் துடிக்கச்செய்வதே CPR நடவடிக்கையின் நோக்கமாகும். 8-10 நிமிடங்களுக்கு மேல் மூளைக்குச் செல்லும் பிராண வாயுவானது தடைபட்டால் மூளைச் சாவு ஏற்படும். இந்த நிலையில் 20 நிமிடங்களுக்கு CPR நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து முதல்வர் எக்மோ கருவியில் இணைக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.

முதல்வரை எக்மோ கருவியில் இணைக்க எவ்வளவு நேரம் எடுத்தது. ரத்த நாளங்களுக்குள் எக்மோ குழாய்களைப் பொருத்த ஆகும் சராசரி நேரமே 32 நிமிடங்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. அப்படியென்றால், எக்மோ கருவி எப்போதிருந்து இயங்கத் தொடங்கியது, இடைப்பட்ட நேரத்தில் முதல்வர் அவர்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது மிக முக்கியமான கேள்விகள்.

மீறப்பட்ட 200 ஆண்டு நடைமுறை!

‘முதல்வரை (எக்மோ கருவியுடன் சேர்த்து?) அன்று இரவு 9.30 மணிக்கு அறுவை சிகிச்சை அறைக்குக் கொண்டு சென்றார்கள்’ என்று செய்தியாளர்கள் சந்திப்பில் டாக்டர்.பாலாஜி கூறியிருக்கிறார். எதற்காக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பாபு ஆப்ரஹாம் பதில் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ’75 நாட்கள் போடப்பட்ட அனைத்து முயற்சிகளும் ஒரு வினாடியில் வீணாகிப் போயின.

இதுபோன்ற நிகழ்வு இன்னொருமுறை நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்’ என்ற கேள்வியை அப்போலோ நிர்வாகமோ, மதிப்பிற்குரிய இந்த மருத்துவர்களோ எழுப்ப மறந்துவிட்டனர். தீவிர சிகிச்சையில் உலக அளவில் புகழைப் பெற்ற மருத்துவர் பீலே அவர்களே இந்தக் கேள்வியை எழுப்ப மறந்துபோனதுதான் ஆச்சர்யம் மற்றும் கவலையை அளிப்பதாக இருக்கிறது. ‘இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன, திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை, உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை’ என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. உலகம் முழுவதும் கடந்த இருநூறு ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் செயல்பாடுதானே இது?

எம்பால்மிங் சீக்ரெட்!

உண்மை இப்படியிருக்க, முதல்வரின் உடல் மருத்துவ அடிப்படையிலான பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை; உட்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை உலகத்தரம் வாய்ந்த அப்போலோ மருத்துவமனையோ,  முதல்வருக்கு இரவு பகல் பாராது சிகிச்சை அளித்த மருத்துவர்களோ முன்வைக்கவில்லை. என்றாலும்கூட, உயிரற்ற அவரது உடலில் இருக்கும் ரத்தத்தை வெளியில் எடுத்துவிட்டு அதற்குப் பதிலாக அவரது ரத்த நாளங்களிலும், வயிறு-நெஞ்சு-கபாலம் ஆகிய உள்வெளிகளிலும் நச்சுத் தன்மை மிகுந்த வேதித் திரவங்களின் கலவையை ஏற்றி உடலினை வறண்டு-கெட்டுப் போகாமல் இருக்க வைக்கும் செயல்பாட்டினை மேற்கொள்ளவேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டபோது அதற்கான மாற்றுக் கருத்தினை எவரும் முன்வைக்கவில்லை. அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்ட முதல்நாள் தொட்டே அவரது உடல்நிலை மற்றும் அதற்கான சிகிச்சை குறித்தான கவலைகள், சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் பொதுவெளியில் பலராலும் எழுப்பப்பட்டு வருகின்றன. அவற்றிற்கான தீர்க்கமான, அறிவியல் அடிப்படையிலான, முழுமையான பதில்களை இன்றளவும் அப்போலோ நிர்வாகமோ, சிகிச்சை மருத்துவர்களோ, தமிழ்நாடு அரசோ முன்வைக்கத் தவறியுள்ளன என்பதுதான் உண்மை. அப்படிப்பட்ட சூழ்நிலையில், முதல்வரின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்குட்படுத்தாமல், அதன் ரத்தம் அனைத்தையும் வெளியில் எடுத்துவிட்டு அதற்குப் பதிலாகக் கடுமையான நச்சுத் திரவக் கலவையை உள்ளே செலுத்துவதென்பது அவரது உடலின் உண்மை நிலைமையை அழிக்கும் செயலாக அமைந்துவிடும் என்பது அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்துக்கும் மருத்துவர்களுக்கும் தெரியாதா என்ன?

ஒருவேளை, அவரது இறப்பிற்கான காரணத்தை அறிந்துகொள்வதற்காக உடலினைப் பிரேதப் பரிசோதனை செய்தாக வேண்டும் என்ற முடிவினை நீதிமன்றம் எடுக்கும்பட்சத்தில் அடக்கம் செய்யப்பட்ட அவரது உடம்பானது ரத்தம் நீக்கப்பட்டு, கடுமையான நச்சுத் திரவங்களால் அடைக்கப்பட்ட ஒன்றாகத்தானே இருக்கும்? அந்த திரவக் கலவையானது உடலின் அனைத்து இடுக்குகளிலும் புகுந்து உடல் உறுப்புக்களின் இயல்புத் தன்மைகளை அறவே மாற்றி அமைக்கும் திறனைக் கொண்டது என்பதை உறுதி செய்யும் ஆயிரக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகள் இருக்கின்றன என்பது அப்போலோ நிர்வாகத்துக்கும் மருத்துவர்களுக்கும் தமிழக-இந்திய அரசுகளுக்கும் தெரியாதா என்ன? இதற்குப் பதிலாக, அவரது இறப்புக்குக் காரணமாகக் கூறப்படும் இருதய செயலிழப்புக்கான காரணங்களை அறிய உதவிடும் மருத்துவரீதியான பிரேதப் பரிசோதனையை நடத்தியிருப்பதுதானே அறிவுகூர்ந்த செயலாக இருந்திருக்க முடியும்? மேற்கத்திய உலகில் நடைமுறையில் உள்ள நிகழ்வுதான் இது என்றாலும் கூட, மேற்கத்திய உலகிற்கும் மருத்துவம் செய்யும் அப்போலோ நிர்வாகமோ, மருத்துவர்களோ இந்த நடவடிக்கையை சம்பந்தப்பட்டோர் மேற்கொள்ள வேண்டும் என்று ஏன் நிர்ப்பந்திக்கவில்லை? தமிழக – இந்திய அரசுகள் இந்த நடவடிக்கையில் இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பூத உடலைக் காப்பாற்ற ஏன் முயற்சி மேற்கொள்ளவில்லை, அப்புறப்படுத்தப்பட்ட அந்த ரத்தத்தை சாக்கடையில் கொட்டிவிட்டனர்.

சொல்வீர்களா சுதா சேஷய்யன்?

2016 டிசம்பர் 5-ம் தேதியன்று இரவு 11.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார் என்று அப்போலோ மருத்துவமனை அறிவித்தது. அதனை அடுத்த ஐந்து நிமிடத்தில் (இரவு 11.35 மணி) தமிழக அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் சென்னை மருத்துவக் கல்லூரியின் உடற்கூறு இயல் துறையின் தலைவரான டாக்டர். சுதா சேஷய்யனிடம், ‘முதல்வர் மரணமடைந்து விட்டார். அவரது உடலை உடனடியாகப் பதப்படுத்தியாக வேண்டும்’ என்றும் அதற்காக அவர் அவரது பணியாளர்களுடன் அப்போலோ மருத்துவமனைக்கு விரைய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். டாக்டர். சுதா சேஷய்யனும் அவரது பணியாளர்களும் அடுத்த 45 நிமிடங்களில் இந்தப் பணியைத் தொடங்கியுள்ளார்கள். 6-ம் தேதியன்று அதிகாலை 12.20 மணிக்கு முதல்வரின் உடலைப் பதப்படுத்தும் பணி துவங்கியது. வலது தொடையில் உள்ள ஃபெமோரல் தமணியின் வாயிலாக அவர்கள் 5.5 லிட்டர் பதப்படுத்தும் திரவத்தினை உடலுக்குள் செலுத்தினர். இதற்காக அவர்கள் தானியங்கி பம்ப் ஒன்றை உபயோகித்தனர். இந்தப் பணி அடுத்த 15 நிமிடங்களில் – அதாவது, செப்டம்பர் 6-ம் தேதி அதிகாலை 12.35 மணிக்கு – முடிவுக்கு வந்தது. வழக்கமாகப் பயன்படுத்தும் உடல் பக்குவத் திரவத்தினை (embalming fluid) முதல்வரின் தோல் நிறத்தை மனதில் கொண்டு  சற்று மாற்றி அமைக்க மருத்துவர்.சுதா முடிவு செய்தார். ‘5.5 லிட்டர் திரவத்தில் 2.5 லிட்டர் அளவுக்கு ஃபார்மலின் திரவத்தையும் கூடுதலாக ஐசோ புரோப்பைல் ஆல்கஹாலையும் கலந்தது இதற்காகத்தான்’ என்று கூறினார். ரத்தக் குழாய்களைத் தவிர, நெஞ்சு – வயிறு – கபாலம் ஆகிய உள்வெளிகளிலும் இந்த உடல் பக்குவத் திரவத்தை செலுத்த வேண்டும் என்பது நியதி. ஆனால், அவ்வாறு செலுத்தப்பட்டதா என்பது பற்றி 6 பிப்ரவரி 2016 அன்று தமிழக அரசால் கூட்டப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது அவர் தெளிவுபடுத்தவில்லை. முதல்வர் அவர்களின் இடது கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகளுக்கான காரணம் என்ன என்பதையும் அவரால் விளக்க முடியவில்லை.

105 கிலோ எடையும் 5.5 லிட்டர் திரவமும்!

முதல்வர் அவர்களின் எடை 105 கிலோ என்று கூறப்படுகிறது. இந்த எடையைக் கொண்ட ஒருவருக்குத் தேவைப்படும் பதப்படுத்தப்படும் திரவத்தின் அளவு என்ன? வெறும் 5.5 லிட்டர் திரவத்தால் இது சாத்தியம்தானா? முதல்வரின் உடலைப் பக்குவப்படுத்தும் செயலைத் தொடங்கும் முன்பு அதற்கான விண்ணப்பப் படிவம் யாரிடம் பெறப்பட்டது என்பது பற்றியோ, காவல்துறையிடமிருந்து ‘இந்த உடம்பைப் பதப்படுத்துவதற்கு ஆட்சேபனை ஏதும் இல்லை’ என்பதற்கான சான்றிதழ் வாங்கப்பட்டதா என்பது குறித்தோ, மருத்துவமனையில் இருந்து இறப்புச் சான்றிதழ் அளிக்கப்பட்டதா என்பது குறித்தோ, மருத்துவ அடிப்படையிலான பிரேதப் பரிசோதனை நடத்த அப்போலோ நிர்வாகத்துக்கும் தமிழக அரசுக்கும் எண்ணம் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து அவர் தன்னைத் தெளிவுபடுத்திக் கொண்டாரா என்பது பற்றியோ மருத்துவர் சுதா ஏதும் பேசவில்லை.

முதல்வரின் உடல் எவ்வாறு அடக்கம் செய்யப்பட உள்ளது என்பது பற்றியும் எத்தனை நாட்களுக்கு அது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட இருக்கிறது என்பது பற்றியும் சிந்தித்து அதற்கேற்ற உடல்பக்குவ திரவத்தை அவர் தேர்வு செய்தாரா என்பது பற்றியும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் ஏன் தெளிவுபடுத்தவில்லை? இறந்தவர் ஒருவரின் உடலைப் பக்குவப்படுத்தும்போது அவர் என்ன காரணத்தால் இறந்தார் என்பதை பக்குவப்படுத்தும் குழுவினருக்கு மருத்துவமனை நிர்வாகம் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்பது நியதி. ஏனெனில், மரணமடைந்தவர் கடுமையான நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அவரது ரத்தம் மற்றும் உடலில் இருக்க வாய்ப்புள்ள கிருமிகளால் பக்குவப்படுத்தும் பணியினை மேற்கொள்பவர்கள் பாதிப்புக்கு உள்ளாக முடியும்.

முதல்வர் அவர்களின் ரத்தத்தில் கலந்திருந்த நோய்த்தொற்று குறித்து அப்போலோ மருத்துவர்கள் சுதா சேஷய்யனிடம் விளக்கினார்களா என்பது குறித்தும் அவர் எதுவும் பேசவில்லை. முதல்வரின் ரத்தம் முழுவதையும் வெளியேற்றிவிட்டு  அதற்குப் பதிலாக உடலைப் பதப்படுத்தும் நச்சுத் திரவத்தை அவரது உடலுக்குள் செலுத்தும் பணியை சுதா சேஷய்யன் குழுவினர் அப்போலோ மருத்துவமனையில் எங்கு மேற்கொண்டார்கள் என்பது குறித்தும் அவர் தகவல் தெரிவிக்கவில்லை.

ஏன் இவ்வளவு அவசரம்?

இறந்தோரின் உடல் இரண்டு காரணங்களுக்காகப் பக்குவப்படுத்தப்படுகிறது. அடக்கம் செய்வதற்கு முன்பாகவே அந்த உடம்பு கெட்டுப்போய்விடக்கூடாது என்பது ஒரு காரணம். உடற்கூறு கல்விக்காக நீண்டகாலம் பதப்படுத்த வேண்டியது மற்ற காரணம். முதலாவது காரணத்துக்காகவே முதல்வரின் உடல் பக்குவப்படுத்தப்பட வேண்டியிருந்தது என்று டாக்டர். சுதா சேஷய்யன் குறிப்பிடுகிறார்.

அடுத்த 19 மணி நேரத்துக்குள் அடக்கம் செய்யப்படவுள்ள, இரண்டு கம்ப்ரெஸ்ஸர்களைக் கொண்ட சிறப்பு குளிர்சாதன சவப் பெட்டியில் வைக்கப்படவுள்ள ஒரு உடலினைப் பதப்படுத்த வேண்டியது அவசியம்தானா என்ற கேள்வியை அவர் எழுப்பினாரா? முதல்வர் அவர்கள் ஐயங்கார் இனத்தைச் சார்ந்தவர் என்பதால் அவரது உடல் எரியூட்டப்படுவதே மரபு. அப்படி இருக்கும்போது அதற்கேற்ற பதப்படுத்தும் வேதிப்பொருட்களை தேர்வு செய்யாமல், எளிதில் வெடிக்கும் தன்மை கொண்ட ஐசோபுரப்பைல் ஆல்கஹால்(Iso propyl alchohol)ஐ உடலைப் பதப்படுத்தும் திரவத்தில் கலந்ததற்கான காரணம்தான் என்ன, சொல்வீர்களா சுதா சேஷய்யன்?

முதல்வர் அவர்களின் தோலின் நிறத்தை நாள் முழுதும் குன்றாமல் வைக்கவேண்டுமென்றால், அதற்கான சிறப்பு பதப்படுத்தும் திரவங்கள் அனேகம் உள்ளனவே… அவற்றையெல்லாம் பயன்படுத்தாமல் மிகவும் விலை குறைந்த, மலிவான வேதிப்பொருள் ஒன்றை அவர் தேர்வு செய்தது எதற்காக? உடலைப் பதப்படுத்துவதற்குக் குறைந்தது 3-4 மணி நேரமாவது தேவை. மிக விரைவில் அதனை முடிக்க வேண்டும் என்றால்கூட குறைந்தது ஒரு மணி நேரமாவது அவசியமாகும். உடலைப் பதப்படுத்தக் கோரும் விண்ணப்பப் படிவத்தை சரிபார்க்க வேண்டும். உடலைப் பதப்படுத்தும் திரவத்தை ரத்த நாளங்களுக்குள் செலுத்துவதற்கு முன்பாக ரத்தத்தை வெளியேற்ற வேண்டும்.

பின்னர் வயிறு, நெஞ்சு மற்றும் கபால உள் வெளிகளுக்குள்ளும் திரவத்தை செலுத்த வேண்டும். இவை அனைத்தையும் பணியாளர்களுக்குக் கேடு ஏற்படாத வண்ணம் செய்து முடிக்க வேண்டும். திரவத்தினை உடலுக்குள் ஏற்றிய பிறகு அது எங்காவது கசிகிறதா என்று பார்க்க வேண்டும். பின்னர் அந்த உடம்பினை சுத்தம் செய்து, அடக்கத்துக்குத் தயார் செய்பவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இத்தனை செயல்பாடுகளையும்  வெறும் 15 நிமிடங்களில் முடித்து விட்டதாக அவர் கூறுகிறார். அதுதான் பல கேள்விகளை எழுப்புகின்றது” என்றவர், இறுதியாக,

” ஒரு மாநிலத்தின் முதல்வரது உடல்நிலை குறித்தும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் உள்ள தகவல்களை அறிந்து கொள்வதற்கான உரிமை அந்த மாநிலத்தின் மக்களுக்கு உண்டு. அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் அவரின் தனி நபர் சுதந்திரத்தையும் தாண்டி அனைத்து மக்களையும் பாதிக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. அவற்றை மறைக்க முயலும் ஒவ்வொரு செயலும் பொதுமக்களுக்கு அரசு ஆற்றும் சேவையை  மாற்றியமைக்கும், மடைமாற்றும் திறனைக் கொண்டிருக்கிறது” என ஆதங்கத்தோடு பேசி முடித்தார் மருத்துவர் புகழேந்தி.

ஆய்வுகளில் இவ்வளவு தெளிவான விளக்கங்களும் சந்தேகங்களும் எழுப்பப்பட்டு இருக்கும் அதே வேளையில், மக்களுக்கும் இதே சந்தேகங்கள் ஆய்வுகளுக்கு அப்பாற்பட்டு எழுந்திருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அவ்வாறு இருக்க உயர்நீதி மன்றம் தானே முன்வந்து ஜெயலலிதா மரணம் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்க ஒரு வழக்கு தொடரலாம் என்பது நல்ல எண்ணம் கொண்ட அனைவரின் எதிர்பார்ப்பு.

நன்றி: விகடன்

Post expires at 5:45pm on Tuesday March 21st, 2017

0 243
உள்ளாட்சி தேர்தலில் இளைஞர்கள் ; ‘லைவ்’ கருத்துக்கணிப்பில் முன்னிலை

தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரண அரசியல் சூழல் மற்றும் அதிமுகவின் உட்கட்சி பூசல் ஆகிய பிரச்சனைகளால் மக்கள் திணறித்தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேவேளையில், தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த உள்ளாட்சி தேர்தலை வரும் மே 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு அறப்போராட்ட வெற்றியைத் தொடர்ந்து, மாணவர்களும் இளைஞர்களும் தமிழகத்தை ஆளவேண்டும் எனக்கருதி இளைஞர் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதன் அடிப்படையில், தற்போது நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவும் ஏற்கெனவே தமிழ்நாடு இளைஞர் கட்சி அறிவித்திருந்தது. அதன் ஒரு முன்னோட்டமாக ஈரோடு இளைஞர்கள் சார்பாக கருத்துக்கணிப்பு ஒன்றை தங்களது பேஸ்புக் தளத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.

அதில், மே மாதத்தில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு உங்களது ஆதரவு? என்ற தலைப்பில் ‘லைவ்’ கருத்துக்கணிப்பை நடத்திவருகிறது. இதில், பெரும்பாலும் தமிழ்நாடு இளைஞர்கட்சிக்கே ஏராளமான வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post expires at 4:10pm on Tuesday March 21st, 2017

0 576
சபை மரபை மீறி மாறுவேடத்தில் சென்ற துணை கமிஷனர் மீது என்ன நடவடிக்கை!?

சட்டசபை உள்ளே காவல் துறை அதிகாரிகள் போலீஸார் பாதுகாப்பிற்கு பணியில் ஈடுபடக் கூடாது.  சபை பாதுகாவலர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவது மரபு.

சபை மரபை மீறி இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு சிறப்பு கூட்டத்தில், அம்பத்தூர் துணை போலீஸ் கமிஷனர் சபை பாதுகாவலர் வேடத்தில் சென்றதாகவும்.

அவர் சபை பாதுகாவலர் சீருடையில் இருக்கும் போட்டோ வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது உண்மை என்றால் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கவேண்டும்.

சட்டசபையில் தி.மு.க.,செயல் தலைவர் உட்பட சபையில் தன்னை தாக்கப்பட்டதாகவும் பூட்ஸ் கால்களாலும் மிதித்தனர் உட்காயம் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post expires at 2:18am on Monday March 20th, 2017

0 405
சிறையில் கேட்ட தலையணை!: இலங்கை வரை பேசப்படும் சசிகலா

சிறையில் தனக்கு சசிகலா தலையணை கேட்டதாகவு அது மறுக்கப்பட்டதாகவும் இலங்கை அரசியல்வாதி ரஞ்சன் ராமநாயக்க பேசியுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது, அண்டை நாடான இலங்கையிலும் பரபரப்பாக பேசப்படுகிறது.

மக்கள் மட்டுமின்றி, அரசில் தலைவர்களும் இது குறித்து குறிப்பிடுகிறார்கள். ஐக்கிய தேசிய கட்சியினர் நேற்று கேகாலை நகரில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினர். அதில் கலந்துகொண்டு பேசிய அரசியல் பிரமுகர் ரஞ்சன் ராமநாயக்க, சசிகலா கைது குறித்து குறிப்பிட்டார்.

அவர், “சசிகலா கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட பின்னர் அவர் தனக்குகூடுதலான தலையணை, போர்வை, ஏ.சி.

போன்ற சொகுசுகள் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு எந்தவிதமான சலுகைகளும் கொடுக்கப்பட வில்லை.

ஆனால் இலங்கையில் நிலைமை வேறாக இருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்பன் பில சிறையில் அடைக்கப்பட்ட போது தனக்கு கூடுதல் தலையணை வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதுவும் தலைக்கு வைப்பதற்கு அல்ல. தவிர மேலும் பல சொகுசு வசதிகளையும் கேட்டுள்ளார். அதுவும் தரப்படுகிறது.

ஆம். இலங்கையில் கைது செய்யப்படும் அரசியல் வாதிகளுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றது சசிகலாவைப் போன்று நடத்தவில்லை. இதுதான் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உள்ள வித்தியாசம். இந்த நிலை மாற வேண்டும்” என்று அவர் பேசினார்.

Post expires at 2:10am on Monday March 20th, 2017

0 758
பழனிச்சாமிக்கு ஓட்டளித்தது ஏன்? யதார்த்தத்தை சொன்னார் எம்.எல்.ஏ.,

மிகுந்த பரபரப்புக்கு இடையில், தமிழக சட்டசபையில், முதல்வர் பழனிச்சாமி, தனது பெரும்பான்மை பலத்தை நிரூபித்திருப்பதாக, சட்டசபை சபாநாயகர் அறிவித்திருக்கிறார்.இதில், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 பேர் ஓட்டளித்துள்ளதாகவும்; எதிர்ப்பாக 11 பேர் ஓட்டளித்துள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்திருக்கிறார். சபையில் இருந்தவர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது, இந்த எண்ணிக்கையில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், பழனிச்சாமிக்கு ஓட்டளித்தவர்களாக காட்டப்படும் எம்.எல்.ஏ.,க்களில் பாதிக்கும் அதிகமானோர், மனது மயக்கப்பட்ட நிலையில் சபைக்கு வந்து ஓட்டளித்ததாகக் கூறப்படுகிறது.இது குறித்து, பழனிச்சாமிக்கு ஆதரவாக ஓட்டளித்த எம்.எல்.ஏ., ஒருவரிடம் கேட்டபோது, அவர் யதார்த்தத்தைக் கூறியதாவது:எல்லோரும் எங்கள் நிலை புரியாமல் எங்களை தாறுமாறாக விமர்சிக்கின்றனர்.

எங்கள் மனநிலையில் அல்லது, எங்களுக்கு அமைந்த சூழ்நிலையில் யார் இருந்திருந்தாலும் அப்படித்தான் செய்திருப்பர். ஜெயலலிதா மறைந்ததும், பன்னீர்செல்வம் முதல்வராக நியமிக்கப்பட்டதற்காக சந்தோஷப்பட்டது என் போன்ற எம்.எல்.ஏ.,க்கள்தான். இதற்காகவே, அவர் இல்லம் சென்று, அவருக்கு எங்களுடைய தனிப்பட்ட வாழ்த்துக்களையும்; பாராட்டுதல்களையும் சொல்லி வந்தோம். என்றைக்கும் உங்கள் பின்னால், பக்கபலமாக இருந்து செயல்படுவோம் என்றும் கூறி வந்தோம்.அதற்கு தகுந்தார் போல, அவரும், ஒரு முதல்வராக மிகச் சிறப்பாக செயல்பட்டார்.

சில விஷயங்களில், மறைந்த ஜெயலலிதாவை விட சிறப்பாகவும்; சாதுர்யமாகவும் செயல்பட்டார். மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்காமல், தமிழக நலன் களுக்கு ஏற்ற வகையில் அவர் செயல்பட்டது ரொம்பவே பிடித்திருந்தது. பொதுமக்களாலும் பாராட்டப்பட்டது.ஆனால், என்னதான் சசிகலா தரப்பு நெருக்கடி என்றாலும், அவர், தனது முதல்வர் பதவியை பொசுக்கென்று ராஜினாமா செய்தது எங்களுக்கெல்லாம் பிடிக்கவில்லை. அதுமட்டுமல்ல, மிரட்டி ராஜினாமா எழுதி வாங்கி இருந்தால், போயஸ் தோட்டத்தில் இருந்து வெளிவந்த மறு நொடியே, அவர் கவர்னரை நேரில் சென்று சந்தித்து, என்னுடைய முழு சம்மதத்தோடு, ராஜினாமா கடிதம் அளிக்கப்படவில்லை; மிரட்டி எழுதி வாங்கி, கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது என்று சொல்லியிருக்க வேண்டும்.

பத்திரிகையாளர்களையும் அழைத்து நடந்ததையெல்லாம் விவரித்திருக்க வேண்டும். இப்படி எதையும் செய்யாத பன்னீர்செல்வம், போயஸ் தோட்டத்தில், ராஜினாமா கடிதத்தை எழுதிக் கொடுத்த கையோடு, தலைமைக் கழகத்துக்கு வந்து, சட்டசபை கட்சித் தலைவராக சின்னம்மாவை முன்மொழிகிறேன் என்று சொல்லி, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரின் ஆதரவையும் கோரியபோது, எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சி.இந்த சூழ்நிலையில் நாங்கள் என்ன செய்ய முடியும்? பன்னீர்செல்வமே, விருப்பப்பட்டுத்தான், சசிகலாவுக்கு தன் பதவியை விட்டுக் கொடுத்துவிட்டார் என நாங்கள் இருந்து விட்டோம். ஆனால், அடுத்த இரண்டு நாட்கள் கழித்து, சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று, அங்கு தியானம் செய்த பின்னால், பத்திரிகையாளர்களிடம், நடந்ததையெல்லாம் சொல்கிறார்.

அதற்கு, தமிழக மக்கள் மத்தியில் பன்னீர்செல்வம் மீது ஒருவித பரிதாபம் ஏற்பட்டதே தவிர, கவர்னர் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டது ஏற்றுக் கொண்டதுதானே. ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல; அடுத்த முதல்வர் பதவி ஏற்கும் வரை, காபந்து முதல்வராகவும் செயல்பட கேட்டுக் கொண்டு விட்டார்.இந்த சூழ்நிலையில் கவர்னராலோ, ஊர் உலகமெல்லாம் பேசும் பன்னீருக்கு ஆதரவான மத்திய அரசாலோ என்ன செய்து விட முடியும். பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவாக கூடுதல் எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.,க்களை திரட்டி வந்து, ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என நிலைத்து, காலம் கடத்தினார் கவர்னர் வித்யாசாகர் ராவ். ஆனால், 10 எம்.எல்.ஏ.,க்களை தன் பக்கம் திருப்ப முடிந்ததே தவிர, பன்னீர்செல்வத்தால், சசிகலா தரப்பு எம்.எல்.ஏ.,க்களை தன் பக்கம் திருப்பும் முயற்சியில், சிறு துரும்பையும் அசைக்க முடியவில்லை.ஆனால், பன்னீர்செல்வம், அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களை தங்கள் பக்கம் திருப்பும் முயற்சியில் தீவிரமாக இருக்கின்றனர் என்றதும், சசிகலா தரப்பினர் எவ்வளவு வேகமாக செயல்பட்டனர் என்பதெல்லாம் எங்களுக்குத்தான் தெரியும்.கிட்டத்தட்ட 127 எம்.எல்.ஏ.,க்களை குண்டுகட்டாக, கூவத்தூர் ரிசார்ட்டுக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு எங்களை பதினோரு நாட்கள் தங்க வைத்தனர். அங்கு, எங்களுக்கு எல்லாமே கிடைத்தது. அதெல்லாம், விவரமாக பட்டியல் போட முடியாது; வெளியிலும் சொல்ல முடியாது. துவக்கத்தில் எங்களுடைய சுதந்திரம் பறிபோவதாகத்தான் நினைத்தோம்.

ஆனால், நாட்கள் நகர நகர அவர்கள் தரப்பில் இருந்து வந்த செங்கோட்டையன், தினகரன், திவாகரன், பழனிச்சாமி, ஜெயக்குமார், செல்லூர் ராஜு என மூத்த தலைவர்களெல்லாம் கொடுத்த தகவல்களும்; அளித்த உறுதி மொழிகளும், அது நிறைவேற்றப்படும் வேகமும் எங்களை முழுமையாக அவர்கள் பக்கம் திருப்பியது.முக்கியமாக அவர்கள் சொன்ன ஒரு விஷயம் எங்களையெல்லாம் ரொம்பவும் யோசிக்க வைத்தது. பழனிச்சாமிக்கு கிட்டதட்ட 125 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது என்பது நிஜம் என்று சொல்லி, அங்கு கூடியிருந்த ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களின் பெயரையும் வாசித்து, அதை நிஜம் என நம்ப வைத்தனர்.இப்படி ஒருபக்கம் 125 எம்.எல்.ஏ.,க்கள் உறுதியாக இருக்கும்போது, அவர்களை விடுத்து வேறு யாரால் ஆட்சி அமைக்க முடியும்? வேறு யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்கிற போது, ஜனாதிபதி ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வந்து, சில மாதங்களிலேயே தேர்தலை கொண்டு வருவதில் எங்களுக்கு என்ன பிரயோஜனம்?ஆக, இந்த இக்கட்டைப் பயன்படுத்தி, எங்கள் தரப்பிலிருந்தும் பணம், தங்கம், வாகனம், அமைச்சர் பொறுப்பு உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதில், சிலவற்றை யாராலும், செய்து கொடுக்க முடியாது என்பது எங்களுக்கும் தெரியும்.

அதனால், சில விஷயங்களில் நாங்களும் கெடுபிடி காட்டவில்லை.இப்படிப்பட்ட சூழலில்தான், பொதுமக்களில் பலரும் எங்களுக்கு போன் செய்து, அவர்கள் விருப்பத்தைக் கூறினர். மனசாட்சிப் படி, சட்டசபையில் ஓட்டளிக்கவில்லை என்றால், ஊர் பக்கம் வர முடியாது என, அன்போடு மிரட்டல் விடுத்தனர். அது பொதுமக்களின் எதிர்பார்ப்புதான். இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால், இந்த ஆட்சி கவிழ்ந்தால், இன்னோரு தேர்தலை சந்திப்பது, எங்களைப் போன்ற எம்.எல்.ஏ.,க்களுக்குத்தான் நெருக்கடி என்பது, அவர்களுக்கு தெரியாது; அது பற்றிய அக்கறையும் அவர்களுக்கு தேவையில்லை.எட்டு மாதங்களுக்கு முன், கிட்டதட்ட ஐந்து கோடிக்கும் மேல் செலவு செய்து எம்.எல்.ஏ., ஆன என்னைப் போன்றவர்கள், இன்னும் விதைத்த பணத்தை எடுக்கவே இல்லை. அதற்குள் இன்னொரு தேர்தல் என்றால், பணத்துக்கு எங்கே செல்வது? யார் கொடுப்பர்? இந்த இடத்தில் இன்னொரு கேள்வி கேட்கப்படும்.இத்தனையையும் மீறி, ஐந்து வருடம் சென்று, நீங்கள் தொகுதிக்குச் சென்று, தேர்தலில் போட்டியிட்டால், மக்கள் ஓட்டளிப்பரா என்று.

அதெல்லாம், இன்னும் நான்கு ஆண்டுகளுக்குப் பின் தானே. அதற்குள் இன்னும் என்னவெல்லாம் அரசியல் ரீதியில் நடக்குமோ. நான் கு ஆண்டுகளுக்குப் பின் நடக்கப் போவதை, இப்போது கணிக்கவும் முடியாது. அதற்காக, இப்போதிலிருந்தே கவலைப்படவும் முடியாது.எப்படியோ, ஓ.பன்னீர்செல்வம் புண்ணியத்தில், பழனிச்சாமி ஆதரவு நிலைப்பாடு எடுத்த எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறோம்.

அந்த வகையில், பன்னீருக்காக உதவி செய்ய முடியவில்லை என்றாலும், அவருக்கு கட்டாயம் நன்றி சொல்லவே கடமைபட்டிருக்கிறோம்.எதற்கெடுத்தாலும், பொதுமக்கள் எதிர்ப்பு இருக்கிறது என்று சொல்கிறவர்களுக்கு, ஒரே ஒரு கேள்வியையும் இந்த நேரத்தில் கேட்க ஆசைப்படுகிறேன். இப்படியெல்லாம், கேள்வி கேட்க முற்படும் பொதுமக்கள், ஒவ்வொரு தேர்தலின்போதும், கூடுதலாக யார் பணம் கொடுப்பார் என எதிர்பார்த்து, ஏங்கி, அது கிடைத்ததும் தானே ஓட்டு போடுகின்றனர். அவர்கள் தரப்பில் இருந்து, நாங்கள் செய்வதை நியாயமா. தர்மமா என்று எப்படி கேட்க முடியும்.இவ்வாறு நடந்த நிகழ்வுகள் குறித்து கூறினார்.

Post expires at 2:06am on Monday March 20th, 2017

0 2726
ஜானகி ஆட்சி போல எடப்பாடி ஆட்சி கவிழும்!? கவர்னர்

ஜானகி ஆட்சி போல எடப்பாடி ஆட்சி கவிழும்!? சட்டவல்லுனர்களிடம் கவர்னர் ஆலோசனை?

எம்.ஜி.ஆர்.,மறைவிற்கு பிறகு ஜானகி அணி, ஜெ., அணி என கட்சி இரண்டாக பிளவுபட்டது. அப்போது ஜானகி முதல்வராக பொறுப்பேற்றார்.

1988 ஜன.,26ல் ஜெ.,அணியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஜானகி பெரும்பான்மை நிரூபிக்க, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது .

அப்போது, ஜானகி அணியினரும், ஜெ., அணியினரும், சட்ட சபைக்குள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பல எம்.எல்.ஏ.,க்களின் வேட்டிகள் உருவப்பட்டன; சட்டைகள் கிழிக்கப்பட்டன; ரத்த காயம் ஏற்பட்டது.

அப்போது சபாநாயகராக இருந்த, பி.எச்.பாண்டியன், ஜானகி அணியில் இருந்தார். அவர், ‘எப்படி ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம், சபாநாயகருக்கே உள்ளது’ எனக்கூறி, ஜெ., ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றி, ஓட்டெடுப்பை நடத்தினார்.ஜானகி அணி பெரும்பான்மையை நிரூபித்து, வெற்றி பெற்றது.

ஆனால், ‘சட்டசபை கலவர பூமியாகி, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட்டிருப்பதால், அது செல்லாது’ எனக்கூறி, மத்திய அரசு, 1988 ஜன., 30ல், ஆட்சியை கலைத்தது. ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.

அதேபோல, நேற்று பெரும் ரகளைக்கு இடையே, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டு, இடைப்பாடி பழனிசாமி, 122 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது, சட்டப்பூர்வமாக செல்லுமா அல்லது 1988ல் நடந்தது போல, ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது.

கவர்னர் சட்டவல்லுனர்களுடன் ஆலோனை செய்து வருகிறார். ஜனாதிபதி ஆட்சி கொண்டு வருவதற்காக சாத்திய கூறுகள் அதிக அளவில் இருப்பதாக கூறப்படுகிறது.

 

Post expires at 6:18am on Sunday March 19th, 2017

0 1503
நாட்டை மீட்க நாளை மெரீனா போர், நடு நடுங்கும் அரசு?

மீண்டும் மாணவர்கள் அணி திரள்கிறார்கள். மாட்டுக்காக போராடிய மாணவச் செல்வங்கள் இப்போது நாட்டுக்காக திரள்கிறார்கள்.

இம்முறை உயிர் தியாகமும் செய்வோம் என்று பகீர் கிளப்புகிறார்கள். மன்னார்குடி ஆட்சி நாட்டுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய ஆபத்து.

நாட்டை கூறு போட்டு விற்று விடுவார்கள். அராஜகம் தலை விரித்து ஆடும். எனவே, அந்த ஆட்சியை அகற்ற ஒன்று கூடுகிறோம் என்கிறார்கள்.

இந்தக் காரணங்களால் நாளை மாணவர்கள் கூடுகிறார்கள். இந்த அறிவிப்பால் அரசு நடுங்குகிறது. அவர்களுக்கு ஆட்சியை தக்க வைப்பதே பெரும் பாடாக இருக்கிறது.

இந்த நேரத்தில் மாணவர்களும் வீதிக்கு வந்தால் எப்படி அடக்குவது? போலீஸ் கூட தங்கள் பேச்சைக் கேட்காதே என்ற அச்சத்தில் கிடக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

Post expires at 12:46pm on Saturday March 18th, 2017

0 264
ஸ்டாலினின் சட்டையை கிழித்து வெளியேற்றினர்!

சட்டமன்றத்திற்கு வெளியே 200க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 20 பேர் இதுவரை வெளியேற்றப்பட்டனர்.

பன்னீர் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அமைதியாக உள்ளனராம். வெளியேற்றப்பட்டு, கதவு மூடப்பட்டதால், நடைபாதையில் அமர்ந்து திமுக எம்.எல்.ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே  ஸ்டாலினும் வெளியேற்றப்பட்டார். அவரது சட்டையை பொத்தான்கள் திறந்த நிலையில் வெளியேறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 3 மணிக்கு அவை மீண்டும் கூடும் போது பழனிச்சாமி ஆதரவு எம்.எல்.ஏக்களை மட்டும் வைத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற சசி தரப்பு முடிவு செய்துள்ளதாம்.

Post expires at 10:23am on Saturday March 18th, 2017

SOCIAL

LATEST REVIEWS

0 649
மேஷம் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 1...