டெஸ்ட் சாம்பியன்களின் மறுபக்கம்

டெஸ்ட் சாம்பியன்களின் மறுபக்கம்

0 127
டெஸ்ட் சாம்பியன்களின் மறுபக்கம்


சர்வதேச டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. கடந்த 18 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில்கூட தோற்காமல் முன்னேறி வரும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்.

விராட் கோலி

தன் தந்தையார் இறந்ததற்கு அடுத்த நாளே டெல்லி அணிக்காக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆடிய கோலி, துக்கத்துக்கு நடுவிலும் 90 ரன்களைக் குவித்தார். கோலிக்கு டாட்டூக்கள் பிடிக்கும். அவருக்கு மிகவும் பிடித்தது சாமுராய் வீரன் உருவம் பொறித்த டாட்டூ.

ரவீந்திர ஜடேஜா

இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் தந்தையார், ஒரு நிறுவனத்தில் வாட்ச்மேனாக பணியாற்றியவர். குதிரையேற்றத்தில் விருப்பம் கொண்ட ஜடேஜா, தனது வீட்டில் 2 குதிரைகளை வளர்த்து வருகிறார்.

முரளி விஜய்

முரளி விஜய்க்கு மிகவும் பிடித்த நாடு பிரேசில். கிரிக்கெட்டுக்கு அடுத்ததாக மிகவும் பிடித்த விளையாட்டு ஸ்னூக்கர்.

கே.எல்.ராகுல்

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல், வாலிபால், ஹாக்கி, கால்பந்து ஆகியவற்றிலும் கெட்டிக்காரர். கோலியைப் போல் டாட்டூக்களில் விருப்பம் கொண்ட இவரது உடலில் 7 டாட்டுக்கள் பச்சை குத்தப்பட்டுள்ளன.

புஜாரா

புஜாரா, முதலில் ஆல்ரவுண்ட ராக இருந்தார். முன்னாள் கிரிக்கெட் வீரரான கார்சன் காவ்ரிதான், அவரை பேட்டிங்கில் மட்டும் பயிற்சி பெறுமாறு அறிவுறுத்தினார். புஜாராவின் தந்தையான அரவிந்த், சவுராஷ் டிரா அணிக்காக கிரிக்கெட் ஆடியவர். தேசிய அணியில் ஆடவேண்டும் என்ற தன் கனவை நனவாக்க இரண்டரை வயது முதலே தன் மகனுக்கு அவர் பயிற்சி அளித்தார்.

அஸ்வின்

அஸ்வினுக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். பிடித்த காமிக் நாயகன் ‘பேட்மேன்’.

இஷாந்த் சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் உயரமான மனிதரான இஷாந்த் சர்மா, 14 வயதில்தான் கிரிக்கெட் விளையாடவே ஆரம்பித்தார். 14 முதல்தர போட்டிகளில் மட்டுமே பங்கேற்றிருந்த நிலையில் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார்.

பார்த்தீவ் படேல்

இந்தியாவுக்காக ஆடிய இளம் விக்கெட் கீப்பர் என்ற பெருமை பார்த்திவ் படேலுக்கு உள்ளது. 17 வயது 152 நாட்களே ஆன நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக அவர் தேர்வு பெற்றார்.

உமேஷ் யாதவ்

உமேஷ் யாதவுக்கு, ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக சேவையாற்ற வேண்டும் என்பதுதான் சிறுவயது ஆசை. ஆனால் ராணுவ வீரர்கள் தேர்வில் இவர் நிராகரிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து காவல்துறை வீரர்களுக்கான தேர்விலும் அவர் நிராகரிக்கப்பட்டார்.

புவனேஷ்வர் குமார்

புவனேஷ்வர் குமார் கிரிக்கெட் வீரர் ஆவதற்கு அவரது சகோதரி ரேகா சிங்தான் காரணம். அவர்தான் 13 வயதில் புவனேஷ்வர் குமாரை கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்த்துவிட்டார்.

ஜெயந்த் யாதவ்

இந்திய அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமான ஜெயந்த் யாதவ், ஆம் ஆத்மி கட்சியின் பிரபல தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த யோகேந்திர யாதவின் மருமகன் ஆவார்.

கருண் நாயர்

கருண் நாயருக்கு சிறு வயதில் நுரையீரல் பிரச்சினை இருந்தது. அது சரியாக ஏதாவது ஒரு விளையாட்டில் அவரை ஈடுபடுத்த வேண்டும் என்று டாக்டர்கள் கூறியதால் கருண் நாயரின் பெற்றோர் அவரை கிரிக்கெட்டில் ஈடுபடுத்தினர்.

Post expires at 6:00am on Friday January 27th, 2017